Wednesday 8 February 2012

அநீதி இழைத்தல்


அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லைஎன்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி

ஏழு விஷயங்கள்


பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்கள்

நபி
(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடைவிதித்தார்கள்.

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.

2. ஜனாஸாவை(மரணித்தவரின் உடலை)ப் பின்தொடர்ந்து செல்வது.

3. தும்மியவர்அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காகயர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது.

4. நலிந்தவருக்கு உதவுவது.

5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது
 
6. (மக்களிடையே) சலாமை(அமைதியை)ப் பரப்புவது.

7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது


(ஆண்களாகிய) எங்களுக்கு அவர்கள் தடை செய்த ஏழு விஷயங்கள் இவைதாம்:

1. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது.

2. (ஆண்கள்) தங்கமோதிரம் அணிவது.

3. மென்பட்டுத் திண்டில் அமர்வது.

4. சாதாரணப் பட்டு அணிவது.

5. அலங்காரப் பட்டு அணிவது.

6. எகிப்திய பட்டு அணிவது.

7. தடித்த பட்டு அணிவது


ஆதாரம் : புகாரி

தடை செய்ததும் வெறுப்பதும்!


அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி)
ஆதாரம் : புகாரி

அக்கிரமம் செய்யாதீர்கள்!


"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!"
 
- நபி(ஸல்) அவர்கள்

நூல்: பைஹகீ

ஸதகத்துல் ஃபித்ர்


முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்

நூல்: புகாரி, முஸ்லிம்